வியாழன், 2 மே, 2024

வஃபாத் அறிவிப்பு

 நேற்றுதான் (01.05.2024) என்னிடம் செல்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். துபையிலிருந்து தாம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

அந்தோ,
சில வாரங்களுக்கு முன்புதான் அவர்களின் மனைவி துபையில் வஃபாத் ஆனார். அதன்பின் தாம் தனியாக வந்து சேர்ந்ததாகத் தெரிவித்தார்கள்.
இதோ இன்று (02.05.2024) அவரை அல்லாஹ் தன்பால் அழைத்துக் கொண்டான்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவருடைய பாவங்களை மன்னித்து ஏக இறைவன் அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தில் இடமளிப்பானாக.
அவரைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை உயர்ந்தோன் அல்லாஹ் வழங்குவானாக.
______
மூத்த ஆலிமும் பல்வேறு அரபிக் கல்லூரிகளில் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய மெளலவி டாக்டர் T. M. அப்துல் காதிர் அன்வரி ஃபாஜில் ஜமாலி ஹள்ரத் அவர்கள் நேற்று இரவு வஃபாத் ஆகிவிட்டார்கள்.
ஃபீ ஸபீல் எனும் மாத இதழை நடத்தியவர்.
பல்வேறு நூல்களை எழுதியவர்.
தற்போது திருக்குறளை அரபியில் கவிதை நடையிலும் உரை நடையிலும் எழுதிக் கொண்டிருந்தார். அரபு - தமிழ் அகராதியையும் எழுதிக் கொண்டிருந்தார்.
-----
ஜனாஸா வைக்கப்பட்டுள்ள இடம்:
127, ஹமீதா மன்ஜில்,
ECR பனையூர்,
சென்னை.
(பனையூரில் மெயின் ரோடு KSA CONSTRUCTION அலுவலகம் அருகில்)
வருத்தத்துடன்
நூ.அப்துல் ஹாதி பாகவி



புதன், 1 மே, 2024

நேர்மறை எதிர்வினையாற்றுவோம்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

 

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. நாம் ஒரு நகைச்சுவை சொன்னால் சிரிப்பார்கள்; துக்கமான செய்தியைச் சொன்னால் வருத்தப்படுவார்கள்; நாம் பிறரைத் திட்டினால் அவர்கள் நம்மைத் திட்டுவார்கள்; நாம் அடித்தால் அவர்கள் நம்மை அடிப்பார்கள்; நாம் பிறரிடம் மரியாதையாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொண்டால் அவர்கள் நம்மை மரியாதையாக நடத்துவார்கள். நாம் அன்பாக நடந்துகொண்டால் அவர்களும் நம்மிடம் அன்பாக நடந்துகொள்வார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒருவர் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அவருக்கு அவர்கள் நன்மையே செய்வார்கள். அதுதான் அவர்களின் எதிர்வினை. ஆக அவர்களின் எதிர்வினை எப்போதும் நேர்மறை எதிர்வினையாகவே இருக்கும். அதைத்தான் பரபரப்பும் படபடப்பும் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

 

அவர்களுக்குத் தொடக்கக் காலத்தில் தொல்லை கொடுத்த மக்காவாழ் மக்களை, அதனை வெற்றிகொண்ட தருணத்தில் அவர்களுள் யாரையும் பழிவாங்கவில்லை மாறாக அவர்கள் அனைவரும் மன்னித்தார்கள். தாயிஃப் நகர மக்கள் கடுஞ்சொற்களால் வதைத்து, சிறுவர்களை ஏவிவிட்டு, கல்லால் அடித்துக் காயப்படுத்தியபோது, மலைகளின் பொறுப்பாளரான வானவர் வந்து நபியவர்களிடம், “இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள இந்த ஊர்மக்களை அப்படியே நசுக்கிவிடட்டுமா என்று பணிவோடு கேட்டுநின்ற வேளையில், “இவர்கள் என்னை ஏற்காவிட்டாலும் இவர்களின் சந்ததிகள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்று கூறினார்கள்; அவர்களின் அறியாமைச் செயலை மன்னித்தார்கள்.

 

முஹம்மதே பைத்துல் மால் சொத்திலிருந்து எனக்கு வழங்குங்கள் என்று கூறி, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேல்துண்டை கடுமையாக இழுத்தவாறு கோரிய கிராமத்து அரபியரை மன்னித்து, புன்னகையோடு அவரை நோக்கி, “அவருக்குத் தேவையானதை வழங்குங்கள் என்று கட்டளையிட்டார்கள். இப்படி ஏராளமான நிகழ்வுகளில் நபியவர்களின் எதிர்வினை நேர்மறையாகவே இருந்தது. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற கோணத்தில் நபியவர்கள் செயல்பட்டதே இல்லை. அத்தகைய நேர்மறை எதிர்வினையைத்தான் தம் தோழர்களுக்கும் போதித்தார்கள்.

 

 

உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “உக்பா பின் ஆமிரே! உன் உறவைத் துண்டித்தவரோடு நீ சேர்ந்து வாழ்; உனக்குத் (தராமல்) தடுத்துக்கொண்டவருக்கு நீ கொடு; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்துவிடு என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்: 17452)

 

 

நம்முடைய நெருங்கிய உறவினர் நம் உறவைத் துண்டித்துக்கொள்கிறார்; நம்மைக் கண்டால் பேசுவதில்லை; நம்மை மதிப்பதில்லை; எந்த நிகழ்வுக்கும் நம்மை அழைப்பதில்லை. இப்படி நடந்துகொள்கிற நம் உறவினரிடம் நம்முடைய எதிர்வினை எவ்வாறு இருக்கும்? நாமும் அவரோடு பேசக்கூடாது; அவரை மதிக்கக்கூடாது; நம் வீட்டு எந்த நிகழ்வுக்கும் அவரை அழைக்கக்கூடாது என்றுதான் ஒரு சாதாரண மனிதனின் உள்ளத்தில் தோன்றும். ஆனால் நபியவர்களைப் பின்பற்றுகிற  ஒரு முஸ்லிமின் அணுகுமுறை-எதிர்வினை அவ்வாறு இருக்காது. அவர் நம்மை மதிக்கவில்லையென்றால் என்ன, நாம் அவரை மதித்து, அவரை நம் வீட்டு நிகழ்வுக்கு அழைப்போம்; அவருடைய வீட்டிற்கு அவ்வப்போது சென்று அவருக்கு ஸலாம் கூறி, உறவைப் புதுப்பித்துக்கொள்வோம் என்றுதான் தோன்றும்; அவ்வாறுதான் நம் மனத்தில் தோன்ற வேண்டும். அதையே நபியவர்கள் கற்பித்துள்ளார்கள்.

 

 

நமக்கு ஒருவன் அநியாயம் செய்துவிட்டான்; நம்மை ஏமாற்றிவிட்டான்; நம்முடைய சொத்தை அபகரித்துக்கொண்டான்; நமக்கு வர வேண்டிய இலாபத்தைத் தடுத்துநிறுத்திவிட்டான்; தொழில் போட்டி காரணமாக நம்மிடம் வரவேண்டிய வாடிக்கையாளர்களை (கஸ்டமர்ஸ்) வேறு பக்கம் திருப்பிவிட்டான். அத்தகைய செயலில் ஈடுபட்டவனை நாம் பழிவாங்கத் துடிப்போம். அதுதான் சாதாரண மனிதனின் இயல்பு. அப்படித்தான் அவனது மனம் தூண்டும். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, “அவனை மன்னித்துவிடு என்று போதித்துள்ளார்கள். நமக்கு அநியாயம் செய்தவனுக்கு நம்முடைய எதிர்வினை இப்படித்தான் இருக்க வேண்டுமா? ஆம்! நாம் அவனை மன்னித்துவிடுவதால், அடுத்தடுத்த செயல்களில் நாம் இயல்பாக ஈடுபட முடியும்; ஒரு பக்கம் அவன் தடுத்துவிட்டாலும் இன்னொரு பக்கம் இறைவன் தருவான் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட முடியும்.

 

 

வசதியாக வாழ்கின்ற நம்முடைய உறவினர் நம்முடைய ஏழ்மை நிலையிலும் நம்மைக் கண்டுகொள்ளாமல், நமக்குப் பொருளாதார உதவி செய்யாமல் தடுத்துக்கொள்கிறார். அவரது நிலத்தில் விளைகின்ற நெல் உள்ளிட்ட பயிர்களையோ தானியங்களையோ நமக்குத் தராமல் சேமித்து வைத்துக் கொள்கிறார். இத்தகைய ஒருவர்மீது நமக்குக் கோபம் வருவது இயல்பு. ஆனால் அவர்மீதான நம்முடைய எதிர்வினை அவ்வாறு இருக்கக்கூடாது. மாறாக, நமக்குக் கொடுக்காமல் தடுத்துக்கொள்வோருக்கு நாம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, உழைத்துச் சம்பாதித்து, நாம் அவருக்குக் கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும் என்ற வைராக்கியத்தையும் சுயமரியாதையையும்தான் நபியவர்கள் மேற்கண்ட நபிமொழியில் கற்பித்துள்ளார்கள்.

 

 

மற்றொரு நபிமொழியில் மேற்கண்ட செய்திகளோடு உனக்குத் தீங்கிழைத்தவருக்கு நீ நன்மைசெய் (முஅஜம் பின் அல்அஉராபீ: 1464) என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. நமக்குத் தீங்கிழைத்தவனை நாம் மன்னிப்பதே பெரிய  விஷயம். அத்தோடு அவனுக்கு நன்மை வேறு செய்ய வேண்டுமா என்று நம் மனத்துக்குள் தோன்றும். ஆம்! நம்மைக் கடித்த நாயை நாம் பதிலுக்குக் கடிப்பதில்லை. அதுபோலவே நமக்குத் தீங்கிழைத்தவரை நாம் மன்னித்து, விட்டுவிடுவதோடு வாய்ப்புக் கிடைக்கும்போது அவருக்கு உதவியும் உபகாரமும் செய்ய வேண்டும். அதுதான் நாம் அவர்மீது காட்டும் எதிர்வினையாக இருக்க வேண்டும். மாறாக நமக்குத் தீங்கிழைத்தவருக்கு நாம் தீங்கிழைக்க வேண்டும் என்று நபியவர்கள் ஒருபோதும் நமக்குப் போதிக்கவில்லை; அவர்களும் அவ்வாறு நடந்துகொண்டதில்லை.

 

 

இந்தச் செய்தியை அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் பதிவுசெய்கிறான்:   

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப்போல் காண்பீர்கள். பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். மேலும் பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். (41: 34-35) நமக்குத் தீங்கு செய்தவனை நாம் மன்னிப்பதோடு, அவனுக்கு நன்மையும் செய்தால், நிச்சயம் அவனது மனம் உருகிவிடும்; பிறகு அவனே நம்முடைய நெருங்கிய நண்பனாக ஆகிவிடுவான். நண்பர்களைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர, எதிரிகளைப் பெருக்கிக் கொள்ளக்கூடாது. இவ்வாறு பிறரின் குறைகளை மன்னிப்பது பொறுமையுடையோருக்குத்தான் சாத்தியம் என்கிறான் இறைவன்.

     

 

பெரும்பாலும் நமக்குத் துன்பமோ இடையூறோ அநியாயமோ செய்வோர் நம்மோடு நெருங்கி வாழ்கின்ற, நெருங்கிய உறவினர்கள் அல்லது நம்மோடு நட்புகொண்டிருப்பவர்கள்தாம். எனவே நாம் மன்னிப்பது நம் உறவினர்களையும் நண்பர்களையும்தான். எனவே அவர்களை மன்னித்துவிட்டு, நம்முடைய அடுத்தடுத்த வேலைகளைச் செய்வதில் நாம் ஈடுபட்டுவிட வேண்டுமே தவிர, அவர்கள் செய்த துரோகத்தை, தொல்லையை நம் மனத்தினுள் அசைபோட்டுக்கொண்டே இருக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் நம்முடைய ஆக்கப்பூர்வமான செயல்களில் நாம் முழுமனத்தோடு ஈடுபட முடியாமல் போய்விடும்.

 

 

கணவன் தன் மனைவிக்கு அநியாயம் செய்வதும், மனைவி தன் கணவனுக்கு மாறு செய்வதும்  அன்றாட வாழ்க்கையில் இயல்பாகிவிட்டது. தன்னுடைய மனைவிதானே என்று அவளை மன்னித்து வாழ்பவன் இனிதே இல்வாழ்வைத் தொடர்வான். மன்னிக்க மனமின்றி எதிர்மறையாக வினையாற்றுபவன் தன் வாழ்க்கையை நிம்மதியின்றித் தொலைப்பான்.

 

 

தன்னுடைய கணவன்தானே என்று கருதி, அவன் செய்த சின்னச்சின்னத் தவறுகளை, அநியாயங்களை, குற்றங்களை மன்னித்துவிட்டால், அவனோடு அவள் நிம்மதியாகச் சேர்ந்து வாழலாம்; எஞ்சிய காலத்தை இனிதே கழிக்கலாம். இல்லையேல் அவ்விருவரும் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து போக நேரிடும்; தொடக்கத்தில் இடைவெளி ஏற்படும்; பின்னர்  தொடர்பறுந்துபோய், இறுதியில் பிரிவு ஏற்பட்டுவிடும். ஆகவே கணவன்-மனைவி இடையே பிணக்குகள் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதை உடனடியாக மன்னிக்கும் பண்பு இருவருக்கும் இருக்க வேண்டும். அதுவே இருவரின் இனிய இல்வாழ்வுக்கு இலக்கணமாகும்.

 

 

நம் வீட்டில் அல்லது கடையில் வேலை செய்கிற பணியாளர்கள், ஓட்டுநர்கள் தம் பணியில் அவ்வப்போது தவறிழைக்கும் நிலை ஏற்படலாம்; பணியில் அவ்வப்போது குறை ஏற்படலாம். அதையெல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டு, இவன் சரியில்லை என்று முடிவு கட்டி, வேலையைவிட்டுத் துரத்திவிடக்கூடாது. சரி, நான் எத்தனை தடவைதான் அவனை மன்னிப்பது, அவன் அடிக்கடி தவறு செய்துகொண்டே இருக்கின்றானே என்று நொந்துகொள்வோர் பின்வரும் நபிமொழியைக் கவனமாகப் படியுங்கள்.

 

 

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என்னுடைய பணியாளரை எத்தனை தடவை மன்னிக்க வேண்டும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைதியாக இருந்தார்கள்.  பிறகு அவர் (மீண்டும்) அல்லாஹ்வின் தூதரே! நான் என்னுடைய பணியாளரை எத்தனை தடவை மன்னிக்க வேண்டும்?” என்று கேட்டார். ஒவ்வொரு நாளும் எழுபது தடவை என்று பதிலளித்தார்கள்.  (திர்மிதீ: 1949) ‘எழுபது தடவை என்பதன்மூலம் எண்ணிக்கையைக் குறிப்பிடுவது நோக்கமன்று. மாறாக அடிக்கடி மன்னித்துக்கொண்டே இரு என்பதுதான் அவருக்கான, நமக்கான அறிவுரை.

 

 

ஒரு பணியாளரையே இத்தனை தடவை மன்னிக்க வேண்டுமென்றால், நம்மோடு ஒன்றாக இணைந்து, நமக்காகவே எல்லாப் பணிவிடைகளையும் செய்து, நமக்காக வாழ்கின்ற நம் மனைவி, தன் குடும்ப வாழ்க்கையில் அவ்வப்போது தவறிழைக்கும்போதும், பணிவிடை செய்வதில் அவ்வப்போது குறை ஏற்பட்டுவிடும்போதும், சிலவேளைகளில் சமையல் சுவையற்றுப் போய்விடும்போதும் நாம் எத்தனை தடவை மன்னிக்க வேண்டும் என்பதை இன்றைய இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மாறாக இவள் சரியில்லை என்று முடிவு கட்டிவிட்டு, வேறொருத்தியைத் தேடக்கூடாது. ஆக பணியாளரோ மனைவியோ யாராயினும் தவறுகள் செய்துவிட்டால் அதற்கான நம்முடைய எதிர்வினை அவர்களை மன்னிப்பதாகவே இருக்க வேண்டும்; தண்டிப்பதாக இருக்கக்கூடாது.

 

 

மனிதர்கள் தவறிழைத்துவிடும்போது அல்லாஹ்வின் எதிர்வினை அந்த அடியார்களை மன்னிப்பதாகவே இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனையோ பேர் தொல்லை கொடுத்து, துன்பமிழைத்தபோது அவர்களின் எதிர்வினை அந்த அறியா மக்களை மன்னிப்பதாகவே இருந்தது. அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு வாழும் நாம், அவனுடைய நற்குணத்தையும் அவனுடைய தூதரின் நற்குணத்தையும் நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து அல்லாஹ்வின் திருப்தியைப் பெற முயல வேண்டும். மன்னிப்பைக் கடைப்பிடிப்பீராக; நன்மையை ஏவுவீராக; அறியாமக்களைப் புறக்கணித்துவிடுவீராக (7: 199) என்ற இறைவசனத்தை நம் மனத்தில் ஆழமாகப் பதித்துக்கொள்வோம். அறியா மக்களின் அறியாமைச் செயல்களை மன்னித்து நேர்மறை எதிர்வினையாற்றுவோம்.

==================








சனி, 27 ஏப்ரல், 2024

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

தினமணி வாசகர் கடிதம் (16 04 2024)


 

நாணயம் மனிதனுக்கு அவசியம் - மா. இராமச்சந்திரன் எழுதியிருந்த  (09 04 2024) துணைக்கட்டுரை  வாசித்தேன். நா நயம் உள்ளவரே பிழைக்க முடியும் என்ற நிலை எப்போதோ உருவாகிவிட்டது. நாணயம் என்பது யாரோ சிலரிடம் இருக்கிறது என்று நம்பலாம். பேச்சு ஒன்று, செயல் வேறாக இருப்பவன்தான் பெரும் பெரும் பொறுப்புகளில் இருக்கின்றான்; அவன்தான் மக்களை ஆள்கிறான். நாணயமாகவும் நேர்மையாகவும் இருப்பவன் தோல்வி காண்கிறான். எல்லாப் பணி வாய்ப்புகளிலும் உள்ளடி வேலைகள் நடக்கின்றன; பணம் குறுக்கு வழியில் பாய்கிறது; பதவியைப் பெற்றுத்தருகிறது. இதுதான் இன்றைய யதார்த்த நிலை. அரசியல், விளையாட்டு, கல்வி, பணிவாய்ப்பு முதலான எல்லாவற்றிலும் நாணயம் நசுங்கிப்போய்விட்டது; பணம் மட்டுமே ஆள்கிறது. இந்நிலை மாற வேண்டுமெனில் நாணயமாக இருப்பதுதான் நம் மரணத்திற்குப் பின்னும் நம்மைப் பற்றிப் பேசவைக்கும் என்ற உண்மையை உணர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். 

 

நூ. அப்துல் ஹாதி பாகவி

பட்டினம்பாக்கம், சென்னை-28

=============


புதன், 10 ஏப்ரல், 2024

விவாத மேடை (தினமணி நாளிதழ் 03 04 2024)

 


 

பிரதமர் மோடியால் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியும் என்று ஜி.கே. வாசன் கூறியிருப்பது நகைப்புக்குரியது. இது மக்களவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படுகிற பொய்யான வாக்குறுதிகளுள் ஒன்று. பத்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி அதை மீட்டிருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்?

 

கச்சத்தீவு குறித்த பேச்சு தேவையற்றதும் மக்களின் பார்வையை மடைமாற்றுவதும் ஆகும். ஏனெனில் மோடி ஆட்சியில் சீனா அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, புதிய பெயர்களையும் சூட்டிவிட்டது. அது ஆக்கிரமித்துள்ள அளவு கிட்டத்தட்ட கேரள மாநிலத்தின் பரப்பளவைவிடப் பெரியது என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு ஆக்கிரமிப்புக்குப் பிறகும் சீனாவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர் கச்சத்தீவை மீட்பார் என்று எவ்வாறு நம்ப முடியும்? இழந்ததை மீட்கப் போராடுவதைவிட இருப்பதை இழக்காமல் பாதுகாப்பதே புத்திசாலித்தனமாகும்.

 

நூ. அப்துல் ஹாதி பாகவி

பட்டினம்பாக்கம், சென்னை-28





சனி, 30 மார்ச், 2024

உள்பள்ளியில் சத்தமிட்டு அறிவிப்புச் செய்ய அனுமதிக்கலாமா?


காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் "அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!'' என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 981)

 

ஒருவர் தமக்குரிய பொருளைத் தொலைத்துவிட்டு, அதைப் பள்ளிவாசலில் சத்தமிட்டுத் தேடுவதற்கே தடை செய்யப்பட்டுள்ளது என்றால், ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன், தாமதமாக வந்தோர் எழுந்து தொழுதுகொண்டிருக்கும் நிலையில், எந்த அனுமதியுமின்றி, ஒருவர் எழுந்து தம் குறையைச் சொல்லி, “உங்களின் உதவியை நாடி வந்திருக்கிறேன்; எனக்குத் தாராளமாக உங்கள் ஸதகா, ஸகாத்தை வழங்குங்கள்” என்று சத்தமிட்டு அறிவிப்புச் செய்கிறார். இதைப் பெரும்பாலான இமாம்களும் நிர்வாகிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

அவர்களுள் யாரும் இந்த ஹதீஸைப் படிக்கவில்லையா? அல்லது நமக்கேன் வம்பு என்று அமைதி காக்கின்றார்களா?

 

தாமதமாக வந்தோர் எஞ்சிய தொழுகையைத் தொழுதுகொண்டிருக்கும்போது இவ்வாறு சத்தமிட்டு அறிவிப்புச் செய்வது அவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சலாகவும் தொல்லையாகவும் இருக்கும் என்பதை யாரேனும் சிந்தித்ததுண்டா?

 

தொழுது கொண்டிருக்கும்போது அலைபேசி சிணுங்கினாலே முகம் சுளிக்கின்ற நாம், இவ்வளவு சத்தமிட்டு அறிவிப்புச் செய்வோரை வெறுமனே வேடிக்கை பார்ப்பது சரியா?

 

இனியேனும் இத்தகைய அறிவிப்பை உள்பள்ளியில் அனுமதிக்காமல் நிர்வாகிகள் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.

பின்குறிப்பு: சில பள்ளிகளில் அத்தகைய கட்டுப்பாடு உண்டு.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

30 03 2024

===========

புதன், 27 மார்ச், 2024

எழுத்தாளரும் பேச்சாளரும்...


-------------------------------------

எங்கள் மத்ரஸாவில் இவ்வாண்டு சிறப்பு மலர் ஒன்று வெளியிட உள்ளோம். அதற்கு உங்கள் கட்டுரை ஒன்று வேண்டும் என்று கேட்டனர். சில நாள்கள் குறிப்பெடுத்து பல மணி நேரங்கள் செலவழித்து, அந்தக் கட்டுரையை எழுதி முடித்து, அதைத் தட்டச்சு செய்து, மின்னஞ்சலில் அனுப்பி வைத்தோம்.

பிறகு அந்த மத்ரஸாவின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்புப் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள்  உரையாற்றினார்கள். இடையில் அந்தச் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அந்த மலர் குறித்துப் புகழ்ந்து பேசப்பட்டது. விழா முடிந்தது. பேச்சாளர்களுக்கு உரிய முறையில் அன்பளிப்புத் தொகைகள் வழங்கப்பட்டன. எல்லோரும் சென்றுவிட்டார்கள்.

அந்தச் சிறப்பு மலரில் கட்டுரை எழுதிய நாற்பது எழுத்தாளர்களை அந்த மத்ரஸாவின் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அவர்களுள் நானும் ஒருவன்.

பின்குறிப்பு: மிக அரிதாகச் சில மத்ரஸாக்கள் எழுத்தாளர்களுக்கு அன்பளிப்புத் தொகை வழங்குவதுண்டு.

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

27 03 2024

===========


புதன், 20 மார்ச், 2024

மக்களின் அழுக்குகள்

 

---------------------------

முன்குறிப்பு: பெறத் தகுதியுடையோருக்கு இந்தக் கட்டுரை பொருந்தாது.

 

தர்மப் பொருள் (ஸகாத்) முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்: 1945)

 

பாக்கியாத்தில் நாங்கள் பயின்ற காலத்தில், ‘ஏற்பது இகழ்ச்சி என்று எங்களின் ஆசிரியர்கள் பலர் எங்களுக்குப் போதித்திருந்தாலும் மேற்கண்ட இந்த நபிமொழியை, அப்துல் ஹமீது ஹஜ்ரத் (பாக்கியாத்தின் தற்போதைய முதல்வர்) அவர்களின் வாயிலிருந்துதான் முதன்முதலாகக் கேட்டோம். ஸகாத் என்பது ஓர் அழுக்குஎன்பதும் கை நீட்டுவது இகழ்ச்சிஎன்பதும் எங்கள் மனங்களில் பதிந்துவிட்டது.

 

 ‘மக்களின் அழுக்குகள்என்பதுதான் நான் அழுத்தமாகச் சொல்ல வேண்டிய செய்தி. ஸகாத் கடமையாகியும் அதை வழங்காமல்  கஞ்சத்தனம் செய்தவர்கள், மறுபக்கம் அதையெல்லாம் மருத்துவமனையின் பில்-லுக்காகச் செலுத்துவதைப் பார்த்தபின்னர்தான் அந்த நபிமொழியின் பொருள் புரிந்தேன்;

அந்த அழுக்குகளெல்லாம் தோல்நோயாக, சொறியாக, சிரங்காக இன்னும் பற்பல நோய்களாக வெளிப்பட்டதைப் பார்த்தபோதுதான் உண்மை தெளிந்தேன்.

 

அதுபோலவே கடமையான ஸகாத்தை உரிய முறையில் வழங்காத செல்வர்களையும் பார்த்தேன். அவர்கள் தாம் சேர்த்துவைத்த சொத்துகள் அனைத்தையும் இறுதியில் மருத்துவமனையில் அள்ளிக்கொடுத்துவிட்டுத்தான் மரணமடைந்தார்கள். அத்தோடு அங்கு நீண்ட காலமாகத் துன்பத்திற்குள்ளானார்கள். அத்தகையோரிடம் அல்லாஹ் தன் கணக்கை முடிக்காமல் மரணிக்க விட்டுவிடுவதில்லை என்பதையும் அறிந்துகொண்டேன்.

 

ஒருவரின் செல்வம் அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவதால்தான் அதை ஸகாத் என்கிறோம். அந்த அழுக்குகள் யாருக்குச் சேர வேண்டும்? தகுதியுடையோருக்குச் சேர வேண்டும். தகுதியில்லாதோர் பெற்றால் அவர் அழுக்குகளை உண்கிறார் என்று பொருள். அழுக்குகளைச் சாப்பிடுவோருக்கு நோய் வரவே செய்யும். அதேநேரத்தில் ஏழைகளுக்கு அது வாழ்வாதாரம் ஆகும். அதாவது குளத்தில் குளிக்கிறபோது நம் கால்களில் உள்ள அழுக்குகளை மீன்கள் உண்ணும்; அது மீன்களுக்கு உணவு; நமக்கோ அழுக்கு. அதுபோலவே ஸகாத் என்பது செல்வர்களுக்கும் தகுதியற்றோருக்கும் அழுக்கு; அது அவர்களுக்குத் தகாது; ஏழைகளுக்கோ அது வாழ்வாதாரம் ஆகும். 

 

செல்வர்கள் தம் செல்வத்திற்குரிய ஸகாத்தை-அழுக்கை உரிய முறையில் வழங்காமல் தாமே உண்பதாலும் தகுதியற்றோர் அந்த அழுக்குகளைப் பெறுவதைத் தவிர்த்துக் கொள்ளாமல் அதைப் பெற்று உண்பதாலும் இருசாராரும் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதைப் பார்த்து, அதிலிருந்து பாடம் படித்து, அந்தப் பாடத்தை என் இனிய சகோதரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நன்னோக்கத்தில் எழுதப்பட்டதே இந்த ஆக்கம்; இறைச்சினம் என்மீது ஏற்படாதிருக்கவே இந்த அறச்சினம்.

 

அழுக்குகளை உண்பதைத் தவிர்த்துவிட்டு, தூய்மையானவற்றை மட்டுமே உண்டு, அதன்மூலம் தோன்றுகிற தூய சிந்தனைகளைப் பிறருக்கு வழங்குவோம்.

 

அன்புடன்      

நூ. அப்துல் ஹாதி பாகவி

20 03 2024

=================

திங்கள், 18 மார்ச், 2024

விழலுக்கு இறைத்த நீர் போல...


--------------------------------------------

இந்தியா கூட்டணி ஒரு பக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, நீதிக்கெதிரான ஆட்சியை அகற்றுவதற்காகத் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.  அதேநேரத்தில் மறுபக்கம் ஆளும் பிஜேபி அரசு தனக்குச் சாதகமாக மின்னணு வாக்கு இயந்திரங்களை வைத்துக்கொண்டு, அதிகாரத்தோரணையோடு தேர்தல் பரப்புரைகளைச் செய்துவருவது மிகுந்த கவலையளிக்கிறது.

மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கெதிரான அரசியல் கட்சிகளின் போராட்டமெல்லாம் மிதமான போக்கில்தான் இருந்தன. எனவே அவையெல்லாம் தற்போது, கடலில் கரைத்த கற்பூரமாகக் காணாமல் போய்விட்டன.

 

மின்னணு வாக்கு இயந்திரங்களை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது; யாரும் அதை ஹேக் (Hack) செய்ய முடியாது; முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று தேர்தல் ஆணையம் அறைகூவல் விடுத்து, ஹேக் செய்ய முடியாத இயந்திரத்தை முன்வைத்தது.

அந்த நேரத்தில், “நீங்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துகிற அத்துணை இயந்திரங்களையும் எங்கள்முன் வையுங்கள்; அவற்றிலிருந்து நாங்கள் விரும்பிய பத்து இயந்திரங்களை எடுத்து ஹேக் செய்து காட்டுகிறோம் என்று நம் பொறியாளர்களுக்குச் சவால்விடத் தெரியவில்லை. அப்படி ஒருவேளை கேட்டிருந்தால் அதை நிரூபித்துக் காட்டியிருக்கலாம். அந்தோ பரிதாபம்! அவ்வாறு யாருக்கும் கேள்வி கேட்கத் தெரியவில்லை.

 

அத்தகைய மின்னணு வாக்கு இயந்திரங்களை வைத்துத் தேர்தல் நடத்திக்கொண்டு, இங்கு மக்களாட்சி நடக்கிறது என்றும் இது மக்களாட்சியை நிலைநிறுத்தும் 18ஆவது ஜனநாயகத் தேர்தல் என்றும் விளம்புவது ஏமாற்று வேலை என்றே பலரும் கூறுகின்றார்கள்.

 

உண்மையில் இது ஜனநாயக நாடு என்றால், மக்களின் ஐயத்திற்குள்ளான ஓர் இயந்திரத்தை வைத்துத் தேர்தல் நடத்தாமல், நாட்டில் பெரும்பாலோர் விரும்புகிற, எல்லோரும் முற்றிலும் நம்புகிற, எல்லோருக்கும் எளிதான வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்திக் காட்ட வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்.

 

மின்னணு வாக்கு இயந்திரங்கள்மூலம் தேர்தல் நடத்தப்பட்டு, அதன்மூலம் பிஜேபி மீண்டும் வெற்றி பெற்றால்  அது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்ததற்குச் சமமாகும். அதன்பிறகு அரசியல் கட்சிகள் போராடிப் பயனில்லை. அதை அகற்ற முனையாமல் தேர்தலை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் பரப்புரை விழலுக்கு இறைத்த நீர் போன்றதாகும்.

 

ஒருக்கால் இதையும் தாண்டி அதிசயம் நடந்தால் இந்திய மக்கள்மீது இறைவன் கருணைகாட்டியுள்ளான் என்று கருதலாம்.

 

பொறுத்திருந்து பார்ப்போம்.

 

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

18 03 2024

==============